108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த் திருவிழா கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 21ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் கற்பக விருட்ச வாகனம், சிம்ம வாகனம், யாளி வாகனம், இரட்டை பிரபை வாகனம், கருட வாகனம் எனப் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். 17 ஆம் தேதி நெல்லளவு கண்டருளினார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது.
இதற்காக நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு 4.30 மணிக்கு சித்திரை தேர் மண்டபம் வந்தடைந்தார். பின்னர் 4.45 மணிக்கு நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்குப் பின் காலை 6 மணிக்கு அங்கு கூடியிருந்த பக்தர்கள் ரங்கா ரங்கா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுக்க சித்திரை வீதியில் தேர் உலா வந்தது. தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற இந்த விழாவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாவண்ணம் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.