ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித விதமாக மணல் கடத்தல் நடப்பதைக் கண்டு காக்கிகளே மண்டையை சொறிந்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக மணல் தட்டுப்பாட்டை சாதகமாக்கிக் கொண்டு பல்வேறு விதமான முறையில் மணல் கடத்தலை செய்து வருகின்றனர் மணல் கடத்தல்காரர்கள். ஆரம்பத்தில் லாரிகள் மூலம் கடத்தினர், அது சற்று குறைந்து அ.தி.மு.க பெரும்புள்ளிகள் மட்டுமே செய்து வருகின்றனர்.
லாரிகளை தொடர்ந்து டிராக்டர், மாட்டு வண்டி, டாட்டா ஏஸ் உள்ளிட்ட வண்டிகளில் மணல் கடத்தலை செய்தனர். அதன் பிறகு இரண்டு சக்கர வாகனத்தில் சாக்கு மூட்டையாக கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். இது காவல் துறைக்கு தெரிந்தும், தெரியாமலும் கனகச்சிதமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து மணல் தேவைக்கு வரும் நாட்களில் தட்டுப்பாடு அதிகமாகி விடும் என்பதால் ஆறுகள், குளங்கள், ஏரிகளில் இரண்டு நாட்களாக மணல் கொள்ளை நடக்கிறது. நேற்றைய தினம் கும்பகோணம் பகுதியில் சொகுசு காரில் மணல் கடத்துவது காக்கிகளுக்கு தெரிந்து பிடித்தனர், அதே நாள் மதியம் ஜீப் மூலம் மணல்கடத்துவதை பிடித்தனர்.
ஒரு வாரத்திற்கு முன்பு மயிலாடுதுறை மருத்துவமனை ஆம்புலன்ஸில் ஆற்றில் இருந்து மணல் ஏற்றி வந்ததை பொதுமக்கள் பார்த்து விட்டு முகத்தில் விரல் வைத்தனர்.
இப்படிபட்ட நிலையில், தண்ணீர் வருகையால் ஆறுகளில் அபாய எச்சரிக்கை பலகை வைத்து வருகின்றனர். அப்படி வந்தபோது கும்பகோணம் அருகே உள்ள குடமுருட்டி. ஆற்றில் இருந்து நள்ளிரவு 1 மணிக்கு பள்ளிக்கூட வேண் கரையேறிதை கண்டு வளைத்து பிடித்தனர். அதில் சாக்கு மூட்டையில் மணல் கட்டி அடுக்கியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த வேனில் 150 மூட்டை மணல் இருந்துள்ளது. வேனையும், மணல் மூட்டையைும் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்துள்ளனர்.
நாடு இந்த மாதிரி ஆகிடுச்சே, திருடுவதற்கு ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ என சமுக ஆர்வலர்கள் கவலை அடைகின்றனர்.