விருதுநகர் மாவட்டத்தில் இன்று குன்னூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, சாத்தூர் போன்ற ஊர்களில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
"அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும் என்று கூறுவது சரிதான். ஜெயலலிதா மீது வழக்கு தொடுத்து சட்டம் பேசியவர்தான் ப.சிதம்பரம். இப்போது ஏன் பயப்படுகிறார்? அவர் நியாயமானவர் என்றால் அதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். தேசிய வங்கியில் பணத்தைக் கொள்ளையடித்தவர்களைப் பார்த்து மோடி சும்மா இருக்கமாட்டார். பிறருடைய சொத்துக்களைத் தன் சொத்துக்களாக நினைக்கும் கட்சிகள்தான் காங்கிரசும் திமுகவும். ப.சிதம்பரமாக இருந்தால் என்ன? பாமர மக்களாக இருந்தால் என்ன? அனைவரும் ஒன்றுதான். சட்டம் தன் கடமையைச் செய்கிறது.
காட்சியிலேயே இல்லாதவர் தினகரன். நானும் ரவுடிதான் என்று வடிவேலு பாணியில் சொல்லிக்கொண்டிருக்கிறார். மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் இருப்பது ஒரே ஒரு குழுதான். அதுவும் கலைந்துவிட்டால் அவருடைய வேலை முடிந்துவிடும். பாண்டிச்சேரி பண்ணையில் பத்திரமாக இருந்துகொள்வார்.
எங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள்தான் ஆட்சிக்கு வரமுடியும். அப்போதுதான், அவர்கள் பலமாகவும், வளமாகவும் இருக்க முடியும். ஸ்டாலின் தன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டும். அவருடைய சொத்து குறித்து விளக்கம் அளித்துவிட்டு எங்கள் மீது புழுதிவாரி தூற்றட்டும். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசுவதையே ஸ்டாலினும் பேசுகிறார். நமது பிரதமர் மோடியை எச்சரிக்கிறார் இம்ரான். 125 கோடி இந்திய மக்களின் தலைவரான பிரதமரை சுண்டைக்காய் பாகிஸ்தான் பிரதமர் மிரட்டுகிறார். அதைக் கைதட்டி ஆரவாரம் செய்யும் உளவாளிகள் கூட்டம்தான், திமுக, காங்கிரஸ் கூட்டம். இவர்களையெல்லாம் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இந்திய இறையாண்மைக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களைக் கைது செய்ய வேண்டும். இதற்காகப் போராடும் கட்சிகளையும் தடை செய்ய வேண்டும்.” என்று வழக்கம்போல் அதிரடியான கருத்துக்களை உதிர்த்தார்.