டிசம்பர் 15 ஆம் தேதி குடியுரிமை சட்டத்துக்கு எதிராக, டெல்லி மதுரா சாலையில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
டெல்லி போக்குவரத்து கழகத்தின் 4 பஸ்களை ஒரு கும்பல் தீவைத்து கொளுத்தியது. 2 போலீஸ் வாகனங்களும் எரிக்கப்பட்டன. இந்த மோதலால் 6 காவலர்கள் மற்றும் 35 க்கும் மேற்பட்ட மாணவர்களும் காயமடைந்தனர். இருப்பினும் மாணவர்கள் அங்கு விடிய விடிய போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியுள்ள நிலையில் தமிழகத்திலும் பல்வேறு அரசியல் கட்சிகள் குடியுரிமை மசோதாவிற்கும், டெல்லி பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்டதற்கும் தங்களது கண்டனங்களை போராட்டம் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியலாளர்களை சந்தித்து பேசுகையில்,
கேள்விகளுக்கு விடையளிப்பதை விடுத்து கேள்வி கேட்ப்பவனின் குரலை ஒடுக்கும் வேலைதான் டெல்லியிலும், அஸாமிலும் நடக்கிறது. இது ஒரு அரச பயங்கரவாதம். மாணவர்களின் மீது விழும் ஒவ்வொரு அடியும் இந்த இந்திய ஜனநாயத்தின் மீது விழுந்த அடி. கேட்கப்படும் கேள்விகளுக்கு நேர்மையான பதில் இல்லாததால் மாட்டிகொள்வோமோ என்ற பயத்தில் விழும் அடி, பாகிஸ்தான் இந்துவுக்கு ஒரு நியாயம்? இலங்கை இந்துவுக்கு ஒரு நியாயமா? என அறிக்கையை வாசித்தார். பின்னர் செய்தியாளர்கள் கேள்விகளை முன்வைத்தனர்.
அதிமுக இந்த மசோதாவை ஆதரித்துள்ளதே? இந்த நிலைப்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள்
தமிழ் இனத்திற்கும் தேசத்திற்கும் செய்த துரோகம்.
இது சிறுபான்மை மக்களுக்கு எதிரானது கிடையாது ஊடுருவுபவர்களுக்கு எதிரானது என அமித்ஷா கூறியுள்ளாரே?
அவர் பிடித்த முயலுக்கு எத்தனை கால் என்று அவருக்குத்தான் தெரியும் என்றார்.