
வெள்ளப்பெருக்கு குறையாத நிலையில், கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை, வனத்துறையினர் திடீரென நீக்கியுள்ளனர். மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், திடீரென நீர்வரத்து அதிகரித்தால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகி விடும்.
கோவை மேற்குத்தொடர்ச்சி மலையில், அடர்வனத்தில் அமைந்துள்ளது, கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, தென்மேற்கு பருவமழை காரணமாக, மலைப்பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஆர்ப்பரித்தது நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது.
தொடர்ந்து மழை பெய்ததால் கடந்த, 9ம் தேதி முதல், நீர்வீழ்ச்சிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். தடையை அறியாமல் சென்ற சுற்றுலா பயணிகள், சாடிவயல் சின்னாற்றில் குளித்தனர். தற்போது, மலைப்பகுதிகளில் மழை தொடர்வதால், புதிதாக உருவாகியுள்ள நீர்வீழ்ச்சிகளில், நீர்வரத்து காணப்படுகிறது. குற்றாலம் நீர்வீழ்ச்சியிலும் வெள்ளம் குறையவில்லை.
இந்நிலையில், 11 நாட்களுக்குப் பிறகு, நேற்று முன் தினம் முதல், இங்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குதுாகலத்துடன் சென்ற சுற்றுலா பயணிகள், ஆர்ப்பரித்த நீர்வீழ்ச்சியில் குளிப்பதை தவிர்த்து, நீர் தேக்கப்பகுதியில் குளித்தனர். பலர் அதையும் தவிர்த்து வேடிக்கை பார்த்தனர்.
நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து குறையாமல் இருப்பது, மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதையே காட்டுகிறது. இதுபோன்ற நிலையில், குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு விதித்த தடையை, வனத்துறையினர் நீக்கியது ஏனென்று தெரியவில்லை. மலைப்பகுதிகளில் கனமழை பெய்தால், வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால், உடனடியாக தடை விதிக்க வேண்டும்.
வனத்துறை பொறுப்பேற்குமா?
இரண்டு ஆண்டுகளுக்கு முன், வனத்தில் மழை அதிகரித்து, மதிய வேளையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த, இரண்டு சுற்றுலா பயணிகள் அடித்து செல்லப்பட்டனர். எனவே, பயணிகளின் பாதுகாப்பு கருதி, வெள்ளப்பெருக்கு குறையும் வரை, நீர்வீழ்ச்சி செல்ல தடை விதிக்க வேண்டும். மாறாக ஏதாவது விபரீதங்கள் நிகழ்ந்தால், அதற்கு வனத்துறையினரே முழு பொறுப்பு என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.