இரண்டு நாட்களுக்கு முன்பு ஆவினங்குடி காவல் நிலையம் அருகில் 24 மணி நேரமும் பரபரப்பான போக்குவரத்து நெடுஞ்சாலை அருகில் சின்ராசு என்பவரின் வீட்டின் கதவை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகை கொள்ளை அடிக்கப்பட்டது.
அதையடுத்து இரண்டு நாட்களுக்கு பிறகு நேற்று இரவு இராமநத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலம்பாடி கிராமத்தில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராம் குமார். இவரது வீட்டில் நுழைந்து 37 சவரன் நகை, சுமார் 1 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் பணம் அதோடு அவரது வீட்டில் வட்டிக்கு கடன் கொடுத்து அதன்மூலம் பெறப்பட்ட 50க்கும் மேற்பட்ட நோட்டுகளையும் கத்தையாக கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதே ஊரில் உள்ள விவசாயி மணி என்பவர் வீட்டில் புகுந்து சுமார் 72 சவரன் நகை, சுமார் 6 லட்சம் பணம் கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.
ஒரே இரவில் ஒரே ஊரில் இரண்டு வீடுகளில் அடுத்தடுத்து நடந்துள்ள கொள்ளைச் சம்பவம் பற்றி நாம் விசாரித்த வகையில் இரண்டு வீடுகளிலும் அந்த குடும்பத்தினர் தனித்தனி அறைகளில் தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர். நடு இரவில் வீட்டின் உள்பக்க பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் அறைகளில் தூங்கியவர்கள் வெளியே வராத அளவில் அறை கதவை வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போட்டுவிட்டு பிறகு வீட்டுக்குள்ளிருந்த பீரோகளை அப்படியே தூக்கிச் சென்று அவர்கள் வீட்டுக்கு அருகே உள்ள சோளக்காட்டில் பீரோவை உடைத்து அதில் இருந்த நகை பணம் ஆகியவற்றை சாவகாசமாக கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
மேற்படி மணி, ராம்குமார் இருவரும் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் விவசாயிகள் ஆகியோரிடம் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வந்துள்ளனர். அப்படி வட்டிக்கு கொடுத்த பணத்திற்கு பதிலாக நூல்களை எழுதி வாங்கி வைத்திருந்தனர். ரோட்டுக் கடையில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் திட்டக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக அவ்வப்போது வீடு புகுந்து கொள்ளையடிக்கும் கும்பல் தங்கள் வீர தீர கைவரிசை திட்டக்குடி பகுதியில் காட்டி வருகிறார்கள். காவல்துறை கொள்ளையர்களை பிடிப்பதில் திணறி வருவதாக குற்றம் சாட்டுகிறார்கள் திட்டகுடி பகுதி மக்கள். கொள்ளை சம்பவம் நடந்தவுடன் டி.எஸ்.பி வெங்கடேசன், மாவட்ட எஸ்.பி அபிநவ் மற்றும் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் ஆகியவை வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.