கடந்த 2002 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்களை தாக்கியதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் தமிழ்வேந்தன் உட்பட ஆறு பேரும் இது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
22 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 70 பேரிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் சரிவர நிரூபிக்கவில்லை. அதே நேரத்தில் அரசுத் தரப்பு சாட்சிகள் அனைவரும் பல்டி அடித்து விட்டார்கள். இதர சாட்சிகளும் காவல்துறையால் நிரூபிக்கப்படவில்லை எனவே அனைவரையும் விடுதலை செய்வதாக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ''கிருஷ்ணமூர்த்தி என்ற உறுப்பினர் 8, 9 தையல்கள் 4 பற்கள் உடைந்த நிலையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெடுமாறன் தலையில் பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்படி திமுக மன்ற உறுப்பினர்கள் பாதிப்புக்குள்ளான சமயத்தில் அதிமுக அரசு குறிப்பாக அன்றைய மாநகராட்சி நிர்வாகம் எங்கள் மேல் வழக்கு போட்டு கடந்த 22 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. ஒரு வழக்கில் நான், தமிழ் வேந்தன், நெடுமாறன், வி.எஸ்.பாபு செல்வி சௌந்தர்ராஜன், சிவாஜி, கிருஷ்ணமூர்த்தி ஆகிய ஏழு பேரும், இன்னொரு வழக்கில் சிவாஜி, நான், வி.எஸ்.பாபு, நெடுமாறன், தமிழ்வேந்தன், செல்வி சௌந்தரராஜன் ஆகிய ஆறு பேரும் என்கிற வகையில் ஏழு பேரும் 22 ஆண்டுகாலமாக நீதிமன்றத்தில் நெடிய படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தோம். இன்று அதற்கு தீர்ப்பு கிடைத்திருக்கிறது. மிகப்பெரிய அளவில் நீதிக்குக் கிடைத்த வெற்றியாக இதைக் கருதுகிறோம்'' என்றார்.