திருச்சி திருவரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டார். அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “108 திவ்ய தேசங்களில் முதல் திவ்யதேசமான திருவரங்கம் ரெங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் திறப்பு விழா இன்று சீரோடும், சிறப்போடும், மகிழ்ச்சியோடும் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கும் சொர்க்கவாசலை திறப்பதற்கும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்து சமய அறநிலையத்துறையும், வருவாய் துறையும், மாநகராட்சியும், மக்கள் நல்வாழ்வு துறையும், காவல்துறையும், தீயணைப்புத் துறை என அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து கள ஆய்வு செய்து கடந்த காலத்தில் எங்கு சிறு சிறு குறைகள் இருந்ததோ அவற்றை அனைத்தையும் நிவர்த்தி செய்யப்பட்டிருந்தது.
108 திவ்ய தேசங்களிலும் எங்கு பார்த்தாலும் கோவிந்தா என்ற நாமத்தோடு அனைத்து திருக்கோயில்களிலும் பரமபதம் வாசல் இன்றைக்கு புண்ணியம் சேர்க்கின்ற நிகழ்வில் பக்தர்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர். குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பிட வசதி என இவைகளுக்கு முன்னுரிமை தந்து அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையுடன் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்றார்.