தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94ஆம் ஆண்டு விழா நேற்று இரவு நடைபெற்று வந்தது. அப்போது தேரினை அப்பகுதி மக்கள் வடம் பிடித்து இழுத்து வந்த நிலையில், மடத்திற்கு அருகே தஞ்சை பூதலூர் சாலையில் தேர் திரும்பும் போது மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது தேர் உரசியதில் தேரின் மீது மின்சாரம் தாக்கி 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலர் காயம் அடைந்தனர். இதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் பரணிதரனும் சிகிச்சை பலனிறி உயிரிழந்தார். அதனை அடுத்து பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. மேலும், 4 சிறுவர்கள், 1 பெண் உட்பட 15 பேர் படு காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தேரினை இழுத்து வரும் போது அப்பகுதி சாலையில் தண்ணீர் இருந்ததாகவும், அதனால் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் தேரினை விட்டு தள்ளி நின்றதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தேரின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ், தஞ்சை மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன், தஞ்சை சரக டி.ஐ.ஜி கயல்விழி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து மத்திய மண்டல ஐ.ஜி பேட்டி அளிக்கையில், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணையில்தான் விபத்து எவ்வாறு நடந்தது என தெரியவரும் எனவும் தெரிவித்தார்.