நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிகழ்ச்சி ஒன்றில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் தந்தை பெரியார் பேசியதாக சில சொற்களை கூறினார். தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாக பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு இன்ஸ்பெக்டர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுளன. திராவிடர் கழகம், திமுக, த.பெ.தி.க., திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சீமான் மீது புகார்கள் அளித்தன.
பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.திருச்சி மாவட்டத்தில் திருவரங்கம் மணப்பாறை மற்றும் கடலூர், சேலம், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.
அந்த வகையில், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கம், திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல் நிலையங்களில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.