நாகை மாவட்டத்தில் இருக்கும் மயிலாடுதுறையை பிரித்து தனி மாவட்டமாக்க வேண்டும் என்கிற நீண்ட நாள் கோரிக்கை கடந்த ஒரு வாரகாலமாக போராட்டமாக மாறி இருக்கிறது.
கடந்த 18ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடரில் நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசியை புதிய மாவட்டமாகவும், காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டை தனி மாவட்டமாகவும், அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கும்பகோணம் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக விரைவில் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கப்படும், என்றும் கூறினார். இதை சற்றும் எதிர்பார்த்திடாத மயிலாடுதுறை பதற்றம் ஆனது. வர்த்தகர்கள் கடைகளை நான்கு நாட்கள் அடைத்து எதிர்ப்பை பதிவுசெய்தனர். வழக்கறிஞர்கள் ஐந்து நாட்களாக நீதிமன்றங்களை புறக்கணித்து கோட்டாட்சியரிடம் மனு கொடுத்ததோடு பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்டோ ஓட்டுனர்கள், தட்டுவண்டி தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் என பல தரப்பினரும் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஐந்தாவது நாள் போராட்டமாக இன்று மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முற்றுகையிடப்போவதை தெறிந்துகொண்ட காவல்துறை நூற்றுக்கும் அதிகமான போலிஸாரை குவித்திருந்தனர். வங்கிகள் உள்ள பகுதி என்பதால் முன்னெச்சரிக்கையாக இரண்டு பகுதிகளிலும் அரண்கள் அமைத்து காவல்துறையினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.
பேரணியாக வந்த வழக்கறிஞர்கள் பேரிகாடை தள்ளிவிட்டு சட்டமன்ற அலுவலகத்தின் வாசலுக்கு சென்று கோஷமிட்டபடி முற்றுகையிட்டனர். அங்கு சட்டமன்ற அலுவலர் இல்லை என்றும் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் வேலூர் இடைத்தேர்தலில் இருப்பதாகவும் அங்கு குவிக்கப்பட்டிருந்த அதிமுகவினரும், உதவியாளர்களும் கூற, கொண்டுவந்த மனுவை சட்டமன்ற அலுவலகத்தின் வாசலில் ஒட்டிவிட்டு சென்றனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் அறிவொளி, சேயோன், சிவச்சந்திரன், கார்த்திக் உள்ளிட்டோர் கூறுகையில்," மயிலாடுதுறை தனி மாவட்ட கோரிக்கை இன்று நேற்று உருவானதல்ல கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கோரிவருகிறோம். தமிழக அரசு மயிலாடுதுறைக்கு தனி மாவட்ட அந்தஸ்து கொடுக்க ஏன் தயங்குகிறது என்பது எங்களுக்கு புரியவில்லை. அதோடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடுத்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கும் எண்ணத்தில் அதற்கான வேலைகளை துவங்கினார். ஆனால் அதை புறந்தள்ளும் விதமாக அவர் வழியில் ஆட்சி செய்யும் எடப்பாடி பழனிச்சாமி இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க மறுத்து விட்டார். இரண்டு புதிய மாவட்டங்களை அறிவிக்கும்போதும் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க உள்ளோம், என்று கூறும் போதும் மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி, ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவை சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும் வாய்மூடி மௌனிகளாக இருந்துவிட்டு, இரண்டு மாவட்டங்களை அறிவிக்கும் போது கைதட்டி சந்தோசத்தை வெளிப்படுத்தியது மயிலாடுதுறை மக்களுக்கு நஞ்சை விதைத்து போல் இருந்தது.
அதனால் அவர் உடனே சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்து எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு அழுத்தம் கொடுத்து மயிலாடுதுறையை தனி மாவட்டத்தை பெற்றுதர வேண்டும். இல்லையென்றால் அவர்களை மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் தொகுதி மக்களே பதவி விலகவைப்பார்கள்." என்கிறார்கள்.