தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வியாபாரிகளான தந்தையும், மகனும் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு மதுரை சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அப்போதைய இன்ஸ்பெக்டரான ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் ரகுகணேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். சிறப்பு எஸ்.ஐ.யான பால்துரை கரோனா காரணமாக மரணமடைந்தார். இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கில் தொடர்புடைய யாருக்கும் ஜாமீன் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு மதுரையிலிருந்து எஸ்.பி. கலைமணி தலைமையிலான 5 பேர் அடங்கியய சி.பி.ஐ. அதிகாரிகள் 2 வாகனங்களில் வந்தனர். அவர்கள் காவல் நிலையத்தில் சீல் வைக்கப்பட்டிருந்த எஸ்.ஐ. ரகுகணேஷ் பயன்படுத்திய அறையை திறந்து பார்வையிட்டனர். பின்னர் ஜெயராஜ், பென்னிக்ஸை தாக்குவதற்குப் பயன்படுத்திய மேஜை மற்றும் மீதமிருந்த ஆவணங்களை எடுத்துச் சென்றனர். பின்னர் அந்த அறையை ஒரு மணிநேரமாக ஆய்வு செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் ஆவணங்களை எடுத்துக் கொண்டு சீல் வைத்த அறையை விடுவித்துவிட்டுச் சென்றனர்.
சாத்தான்குளம் சம்பவம் வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டுகிற நிலையிலிருப்பதாக கூறப்படும் நேரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் காவல்நிலையம் வந்து சென்ற சம்பவம் பரபரப்பு சூட்டைக் கிளப்பியுள்ளது.