சென்னையில் உள்ள மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) இன்று காலை நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதுடன், “மகாகணபதிம்” என்ற சமஸ்கிருதப் பாடல் இசைக்கப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இதற்கு மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட அனைவரும் எழுந்து நின்றுள்ளனர். பொதுவாக, தமிழகத்தில் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்படுவதும், மத்திய அரசு நிறுவனங்களில் தேசிய கீதத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கப்படுவதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது.
ஆனால், இவை இரண்டும் இல்லாமல் இன்று சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற அரசு விழாவில் சமஸ்கிருத பாடல் இசைக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் அதிர்ச்சியளிப்பது மட்டுமல்ல கண்டனத்திற்கும் உரியது.அரசு விழாவில் ஒரு குறிப்பிட்ட மதத்தினுடைய பாடல் இசைக்கப்படுவது என்பது மதச்சார்பின்மைக்கு விடப்பட்ட சவாலாகும்.
மேலும் இது சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழி திணிப்பினுடைய இன்னொரு வடிவமாகும். உயர்கல்வி நிறுவனத்தில் உள்ள பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்திய பாஜக அமைச்சர்களின் விருப்பத்திற்கு அடிபணிந்து செயல்படுவது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது.
பாஜக ஆட்சியாளர்களின் இத்தகைய சமஸ்கிருத திணிப்பு மற்றும் மதவாதப் போக்கினை இனியும் தமிழ்நாட்டில் அனுமதிக்காத வண்ணம் அனைவரும் குரலெழுப்பிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.