வேலூர் மாவட்டம், வாணியம்பாடி நகரில் இருந்து ஆந்திரா, கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அடிக்கடி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படும் ரேஷன் அரிசி மூட்டைகள் டன் டன்னாக சிக்குகின்றன.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடெல்லி என்கிற பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக வாணியம்பாடி தாலுக்கா உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட வழங்கல் அதிகாரி பேபி இந்திரா தலைமையிலான பறக்கும்படையின் தனி வட்டாச்சியர் சரவணன் படை, அனு என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில் வீட்டுக்குள் 5 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன. மற்றொரு அறையில் 5 டன் அரிசிகள் இருந்தன. 10 டன் அரிசி என 10 ஆயிரம் கிலோ அரிசி மூட்டைகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தவர்கள், அந்த வீட்டுக்கும் சீல் வைத்தனர். அந்த வீட்டின் உரிமையாளர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள், காவல்துறையில் புகார் தெரிவிக்கவுள்ளனர். இந்த அரிசி கடத்தல் கும்பலை கண்டுபிடிக்க வேண்டும் என தீவிரமாக உள்ளனர். இந்த வீடு ஒரு பெண்மணியுடையது என கூறப்படுகிறது. இதன்பின்னால் உள்ள அரசியல் புள்ளிகள் யாராவது உள்ளார்களா என தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.