புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் தாலுகா ஏம்பல் கிராமத்தில் சில நாட்ளுக்கு முன்பு 7 வயது சிறுமி சாமிவேல் (எ) ராஜா என்பவனால் கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த கொடூரக் கொலைக்கு நீதி கேட்டு அரசியல் கட்சிகள், உறவினர்கள், மனித உரிமை அமைப்புகள் போராட்டங்களை நடத்தினார்கள்.
உடனடியாக கொலைகாரனை கைது செய்தனர் போலீசார். தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கியதைத் தொடர்ந்து திமுக, தேமுதிக, இஸ்லாமிய அமைப்பினர் உள்ளிட்ட பலரும் நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினர்.
இந்த நிலையில் சிறுமியை பறிகொடுத்த குடும்பத்தினர் கடும் மனவேதனையில் இருப்பதை அறிந்த மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி உடனடியாக அவர்களுக்கு உளவியல் சிகிச்சை அளித்து அவர்களை அதிலிருந்து மீட்க உத்தரவிட்டார்.
இந்த உத்தரவையடுத்து மாவட்ட மனநல திட்ட அலுவலர் மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் தலைமையிலான குழுவினர் சிறுமியின் வீட்டிற்கு சென்று சிறுமியின் பெற்றோருக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கி அதிலிருந்து மீள மருந்து, மாத்திரைகளும் வழங்கினார்கள்.
மேலும் தொடர்ந்து சிகிச்சையும், ஆலோசனையும் வழங்க உள்ளதாக மருத்துவக்குழுவினர் கூறியதுடன் அவசரமாக உளவியல் ஆலோசனை பெற புதுக்கோட்டை பழைய முத்துலெட்சுமி ரெட்டி மருத்துவமனையில் இயங்கும் மனநல திட்ட அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும் எண்கள் வழங்கப்பட்டது. ஆட்சியரின் உத்தரவில் மனநல சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அந்த குடும்பத்தினர் ஓரளவு தெளிவு பெற்றுள்ளனர்.