![Property documents of the famous big temple set on fire ... Exciting Temple City !!](http://image.nakkheeran.in/cdn/farfuture/zZ0qUwep2LP14-C4do9tOU8V8V2K7h4w9kj4ZiL-jso/1598722650/sites/default/files/inline-images/asfdasfsfsfs.jpg)
ஆண்டாண்டு காலம் ஈகோ காரணமாக சைவமதத்தினரும் வைணவ சமயப்பிரிவினரும் வெட்டியும் குத்தியும் மடிந்த போது, பக்தர்களுக்குள் அமைதி ஏற்படுத்தும் வகையில் தன் உடலில் ஒரு பகுதி சிவனாகவும் மறுபாகம் அரியாகவும் ஒரு சேர உருவெடுத்து சைவமும், வைணமும் ஒன்றே என உணர்த்தி அமைதியை ஏற்படுத்தினார் சிவபெருமான். சிவபெருமான் நடத்திய அரிய காட்சியானது நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோவில் மண்ணில் நடந்த வரலாறு. அதனாலேயே அவர் பெயரால் அமைந்த பிரசித்தி பெற்ற பெரிய ஆலயம் சங்கரநாராயணர் ஆலயம்.
இந்த ஆலயத்திற்கென்று ஆலயம் உருவாக்கிய உக்கிரபாண்டிய மன்னர், பின்னர் வழிவந்த மன்னர்கள், பாளையக்காரர்கள், ஜமீன்தார்கள் போன்ற பலர் தங்க வைர அணிகலன்கள் வழங்கியதோடு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் படித்தரமாக வழங்கியுள்ளதால், ஆலயத்திற்கான இந்தச் சொத்துகள் மதிப்பிட முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளன. தவிர சிவனாலயத்தின் நிலங்களைப் பலர் குத்தைக்கு எடுத்துப் பிழைப்பு நடத்தியும் வருகின்றனர். தற்போதைய லெவலில் நிலச் சொத்துகளின் மதிப்பும் பல கோடிகளைத் தாண்டும்.
தற்போதைய லாக்டவுனில் 5 மாதங்களாகப் பக்தர்கள் வழிபாட்டுக்காக அனுமதிக்கப்படுவதில்லை. நடக்க வேண்டிய கால நேர பூஜைகள் மட்டுமே நடக்கின்றன. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆலயத்தின் முக்கிய ஆவணங்கள், நிலம் தொடர்பான நீதிமன்ற விசாரணை ஆவணங்கள், ஆலயத்தின் முக்கியக் குறிப்புகள், மதிப்புமிக்க பொருட்கள், ஆலயத்தின் தரப்பட்ட நன்கொடை ரசீதுகள் உள்ளிட்ட பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டிருக்கின்றன.
இந்தத் தகவல் வெளியேற ஆலயத்தின் தக்கார், பரஞ்சோதி மற்றும் துணை ஆணையர் கணேசன், இருவரும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தியதில் அனுமதியின்றி எரிக்கப்பட்டது தெரியவந்தது. அதில் தொடர்புடைய ஆலய ஊழியர் நீலகண்டன் என்பவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். ஆலயத்தின் ஏக்கர் கணக்கான நிலங்கள் பல புள்ளிகளின் பொறுப்பில் உள்ளது. இன்னமும் மீட்கப்படவில்லை. இது போன்ற ஆவணங்கள் லாக்டவுன் வாய்ப்பை பயன்படுத்தி எரிக்கப்பட்டது. அவர்களுக்குச் சாதகமாகிவிடும். அதன் கூட்டுச் சதியின் காரணமாக நடத்தப்பட்டதா இந்தத் தீ எரிப்புச் சம்பவம் என்ற ஆழ்ந்த சந்தேகத்தைக் கிளப்புகின்றனர் பக்தர்களும் நகரவாசிகளும்.
நேர்மையான விசாரணை நடத்தப்பட்டால் மர்மங்களும், அதிர்ச்சிகளும் விடுபடும் என்பதே நகரின் எதிர்பார்ப்பு.