கரோனா கட்டுப்பாடுகளால் நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிகார பலமிக்க கிராம சபைக் கூட்டங்கள் இன்று காந்தி ஜெயந்தியில் நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் வளாகத்தில் ஆலமரத்தடியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு, ''கிராம சபை என்பது பலமான அதிகாரம் மிக்க அமைப்பு. இதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் பலமானதாக இருக்கும்'' என்று கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். கூடியிருந்த பொதுமக்கள் ஒவ்வொருவராகக் கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினார்கள்.
செங்கோடன் என்பவர் பேசுகையில்,''கொத்தமங்கலம் ஊராட்சி அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய ஊராட்சி. இங்கு 25 நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளது. ஆனால் ஒரே ஒரு இயக்குநர் தான் உள்ளார். ஒருவரே 25 தொட்டிகளை இயக்க முடியுமா? பல இடங்களில் மாதம் ரூ.250க்கு பலரை நியமித்தார்கள். அவர்களுக்கும் பல மாதமாகச் சம்பளம் இல்லை. மேலும் ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்ட பூங்கா, விளையாட்டு அரங்கம் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது'' என்றார்.
இதற்கு அதிகாரிகள் பதில் சொல்லுங்கள் என்று அமைச்சர் சொல்ல, திட்ட அலுவலர், ''விரைவில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்'' என்றார். ''விரைவில் என்றால் எத்தனை நாளில் என்று சொல்லுங்கள்'' என்று அமைச்சர் கேட்க, ''ஒரு வாரத்தில் நிறைவேற்றப்படும்'' என்றார்.
தொடர்ந்து ஒரு பெண் பேசுகையில், ''நூறு நாள் வேலையை 150 நாளாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் எங்களுக்கு ஆண்டுக்கு 12 நாள் தான் வேலை கிடைக்கிறது''என்றார். இந்த கோரிக்கையையும் சரி செய்யப்படும் என்றார் அதிகாரி.
விஜயகுமார் என்பவர் பேசுகையில், ''நெகிழி பயன்படுத்தக் கூடாது. பொதுமக்களிடம் மட்டும் சொல்வதைவிட நெகிழி தயாரிப்பு நிறுவனங்களை மூடினாலே நெகிழி பயன்பாட்டுக்கு வராதே. நூறு நாள் வேலையில் தண்ணீர் செல்லும் வரத்து வரிகளில் தடையான ஆக்கிரமிப்பு பகுதிகளைச் சீரமைப்பதில்லை. பிறகு எப்படி தண்ணீர் போகும்?' 'எனக் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் மெய்யநாதன், ''நெகிழியால் முற்றிலும் பாதிக்கப்படுகிறோம். அதனால் தான் 3,000 நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை. ஆனால் வெளிமாநிலங்களிலிருந்து கொண்டு வந்து விற்கிறார்கள். மக்கள் ஒவ்வொருவரும் அதனைப் புறக்கணிக்க வேண்டும். அதேபோல வரத்து வாரி ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றிக் கொள்ள வேண்டும். அல்லது அதிகாரிகள் அகற்ற வேண்டும்'' என்றார்.
பிரபாகரன் என்பவர் பேசுகையில், ''அரசு வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளின் பெயரைப் பயன்படுத்தி பணம் எடுத்து மோசடி நடந்திருக்கிறது?''என்றார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், ''இது பற்றி உடனே சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழுவினர் முழுமையாக ஆய்வு செய்ய உத்தரவிடுகிறேன். ஒரு வாரத்தில் அறிக்கை வேண்டும்'' என்றார்.
அதேபோல மின்வாரியம், சாலை, தெருவிளக்கு, குடிநீர், புதிய வீடுகள் பற்றி கேள்விகளுக்கும் அதிகாரிகளையே பதில் கூற வைத்ததோடு. அதிகபட்சம் 2 முதல் 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.