பண்ருட்டி அருகே கடந்த 19ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணப்பெண் நடனமாடிய விவகாரத்தில் மணமகன் கன்னத்தில் அறைந்ததால், கோபத்தில் முறைமாமனை திடீரென்று தேர்வு செய்து திருமணம் செய்து கொண்டார் மணமகள். இதையடுத்து, நிச்சயிக்கப்பட்ட மணமகன் வீட்டார் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் திருமணத்திற்காக 7 லட்சம் செலவாகி உள்ளது. எனவே அதனை மணமகள் குடும்பத்தினர் திருப்பித் தரவேண்டும் என்று கூறி புகார் அளித்திருந்தனர்.
இந்த நிலையில், மணமகள் அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் மகளிர் காவல் நிலையத்திற்கு நேற்று சென்று பழைய மணமகன் மீது புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், 50 பவுன் நகை, 8 லட்சம் மதிப்பில் கார், 6 லட்சம் மதிப்பில் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றை வரதட்சணையாக வாங்கிக் கொடுக்கவேண்டுமென்று மணமகனின் தாயார் மற்றும் உறவினர்கள் வற்புறுத்தி வந்தனர். இந்த நிலையில், மணமகன் விருப்பப்படிதான் வரவேற்பு நிகழ்ச்சியில் நடனம் ஆடினேன். ஆனால் மணமகன் தாயார் மற்றும் உறவினர்கள் தூண்டுதலின் பேரில் மணமகன் என் கன்னத்தில் அறைந்து, வரதட்சனை தர மறுத்த காரணத்தை மறைமுகமாகக் காட்டி திருமணத்தை நிறுத்தி விட்டனர்.
எனவே மணமகன் குடும்பத்தினர் மீது வரதட்சணை சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டிருந்தார். இரண்டு புகார்களையும் பெற்றுக்கொண்ட மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வள்ளி இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படாததால் இருதரப்பினரும் நீதிமன்றம் சென்று தீர்வு காணுமாறு முடிவு செய்யப்பட்டு இருதரப்பினரும் கலைந்து சென்றனர். திருமண நிறுத்தம், மணமகன் மாற்றம், இருதரப்பினரின் புகார் ஆகிய சம்பவங்கள் பண்ருட்டி பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.