நேற்று (14.06..2021) தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியாக ஏ.கே.எஸ். விஜயன் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் பேசுகையில், ''வரும் 17ஆம் தேதி காலை தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். அவருக்கு 10.30 மணிக்குப் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரை சந்திப்பதற்கான நேரம் கொடுக்கப்பட்டிருக்கிறது'' என்றார்.
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார். இதில் நீட் தேர்வுக்குத் தமிழ்நாட்டில் இருந்து விலக்கு, ஆக்சிஜன் பற்றாக்குறைக்கான தேவைகளை செய்ய வேண்டும், கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளை அதிக அளவில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும், ஹைட்ரோகார்பன் திட்டத்தைத் தமிழ்நாட்டில் செயல்படுத்தக் கூடாது என்பன போன்ற பல்வேறு நலன் சார்ந்த விஷயங்களை வலியுறுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சந்திப்பு முடிந்த பிறகு 18ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க இருக்கிறார். அது மட்டுமில்லாமல் சீதாராம் எச்சூரி உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களையும் முதலமைச்சர் சந்திக்க இருக்கிறார்.