ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பூபதி என்பவர் கடந்த 1 ஆம் தேதி வேலை நிமித்தமாக தனது இருசக்கர வாகனத்தில், இடையன்காட்டுவலசு சாலையில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து காரணமாக, நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் பூபதியை மீட்டு, அதே பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு பூபதியை பரிசோதித்த மருத்துவர்கள் காயமடைந்த இடத்தில் தையல் போடவேண்டும் என கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து சிகிச்சை நடைபெற்றதையடுத்து வீட்டிற்கு வந்த பூபதிக்கு தொடர்ந்து வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த பூபதி, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது, தையல் போடப்பட்ட இடத்தை அரசு மருத்துவர்கள் சோதனை செய்த போது, காயமடைந்த இடத்தில் சிறிய துணி வைத்து தையல் போடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து கார் ஓட்டுநர் பூபதியிடம் தகவல் தெரிவித்ததோடு, மறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அறுவை சிகிச்சைக்குத் தயாராகி வரும் பூபதி, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த பிரச்சனை தொடர்பாகச் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது, காயமடைந்த இடத்தில் ரத்தம் நிறுத்துவதற்காக இதுபோன்ற சிகிச்சை செய்வது வழக்கமான ஒன்று எனத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவர்களின் விளக்கம் குறித்து அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்டபோது, ரத்தம் நிறுத்துவதற்கு இதுபோன்ற முறைகளை நாங்கள் எப்போதும் செய்வதில்லை எனத் தெரிவித்தனர். இது பற்றி முழுமையான விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.