திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழுவில் உறுப்பினரும் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமாக இருப்பவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன். திமுகவின் முக்கிய புள்ளிகளில் ஒருவரான இவர், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்து வருகிறார். இவரது மனைவி பிரியா தயாநிதி மாறன். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தற்போது, தயாநிதி மாறன் சென்னை ஆர்.ஏ.புரத்தில் வசித்து வரும் நிலையில் அவரது மனைவி பிரியா மற்றும் பிள்ளைகள் கடந்த வாரத்தில் மலேசியாவில் இருந்துள்ளனர்.
இதற்கிடையில் தயாநிதி மாறனும் மலேசியாவில் இருக்கும் அவரது மனைவியும் ஜாயின்ட் அக்கவுண்ட் ஒன்றைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த அக்கவுண்ட்டை சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனியார் ஆக்ஸிஸ் வங்கியில் சேமிப்பு கணக்காக வைத்துள்ளனர். மேலும், தயாநிதி மாறனின் மொபைல் நம்பர் தான் அந்த வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் நம்பராக இருந்து வருகிறது. இத்தகைய சூழலில், கடந்த 8 ஆம் தேதி மாலை 4 மணியளவில் மலேசியாவில் இருக்கும் தயாநிதி மாறனின் மனைவிக்கு அடையாளம் தெரியாத செல்போன் நம்பர்களில் இருந்து மூன்று தடவை அழைப்பு வந்திருக்கிறது.
அப்போது, அந்த காலில் இந்தியில் பேசிய மர்ம நபர்கள், தாங்கள் ஆக்ஸிஸ் வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறியுள்ளனர். அதைத் தொடர்ந்து, உங்களுடைய கணக்கில் இருந்து ரூபாய் 99 ஆயிரத்திற்கு பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், வங்கி ஊழியர் போல பேசி ஏடிஎம் கார்டு எண்கள் மற்றும் பணப் பரிவர்த்தனை விபரங்களை கேட்டுள்ளனர். இதனிடையே, சுதாரித்துக்கொண்ட தயாநிதி மாறனின் மனைவி எந்தவித ஓடிபி நம்பரையும் ஷேர் செய்யாமல் அந்த அழைப்பை துண்டித்துள்ளார். இதற்கிடையில், சிறிது நேரம் கழித்து தயாநிதி மாறனின் செல்போன் எண்ணிற்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அந்த மெசேஜில், வங்கிக் கணக்கிலிருந்து 99 ஆயிரத்து 999 ரூபாய் ஒரே தடவையாக எடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருகணம், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தயாநிதி மாறன், உடனடியாகத் தனது வாங்கிக் கணக்கின் செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளார். பின்னர், அடுத்தநாள் இந்த நூதன மோசடி சம்பவம் குறித்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அந்த புகாரில், தனக்கு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்ததாகவும், அதன்பின் தனது வங்கிக் கணக்கிலிருந்து 99 ஆயிரத்து 999 ரூபாய் திருடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது வங்கிக் கணக்கில் பணத்தை திருடிய சைபர் மோசடி கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுக் கொடுக்கும்படி தெரிவித்திருந்தார்.
அதன்பேரில், அந்த புகாரை எடுத்துக்கொண்ட போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், அதை சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவுக்கு அனுப்பி வைத்தார். அதன்பிறகு, இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இதுதொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இதனிடையே, போலீஸ் விசாரணையில் பணத்தை திருடிய கும்பல் இந்தி மொழியில் பேசியதை அடுத்து, அவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்த மோசடி கும்பல் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மோசடி செய்தவர்களைக் கண்டுபிடிப்பதற்கும் இழந்த தொகையினை மீட்பதற்கும் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இதுபோன்ற ஆன்லைன் வங்கி மோசடிகளிலிருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏதேனும் புகார்கள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் 1930 என்ற சைபர் கிரைம் உதவி மைய எண்ணை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில், வங்கி விவரங்கள், ஓ.டி.பி. எண் எதையும் பகிராமல் தனது வங்கிக் கணக்கில் பணம் திருடப்பட்டது குறித்து திமுக எம்பி தயாநிதி மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தார். இந்தியாவில் நடந்த சைபர் கிரைம்களில் 75 சதவீதம் நிதி மோசடிக்கானவை என செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே ஆதார் தகவல்கள் விற்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின. மக்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? எனக் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணம் திரும்ப கிடைத்துவிட்டதாக ஆக்சிஸ் வங்கி நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆக்சிஸ் வங்கி நிர்வாகம் சார்பில் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தயாநிதி மாறன் எக்ஸ் (ட்விட்டர்) தள பதிவை மேற்கோள்காட்டி ஆக்சிஸ் வங்கி நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள பதிவில், “வங்கிக் கணக்கில் இருந்து திருடப்பட்ட பணம் கண்டறியப்பட்டு, வங்கிக் கணக்கில் மீண்டும் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சைபர் கிரைம் பிரிவு விசாரணைக்காக புகார் செய்துள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.