நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
தி.மு.க கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் தீவிரம் காட்டிவரும் நிலையில் அ.தி.மு.க. அதன் கூட்டணிக்காக பாமக, தேமுதிக, புரட்சி பாரதம், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.
பாராளுமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டிவருவதைத் தொடர்ந்து, தேமுதிகவுடன் கூட்டணி என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. இந்நிலையில், தமிழக முன்னேற்ற காங்கிரஸ் தலைவர் அருள்தாஸ், சென்னையில் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, ஆதரவு தெரிவித்து ஒப்புதல் கடிதம் கொடுத்திருக்கிறார். தமிழக முன்னேற்ற காங்கிரஸுடன் கூட்டணி உருவான நிலையில், அக்கட்சியின் நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். இந்நிகழ்வின் போது, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியும் உடனிருந்துள்ளார்.