சென்னை மாதவரம் பகுதியில், ஈஸ்வரன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் சரவணன்(44). இவருக்கு 15 வருடங்களுக்கு முன் திருமணமாகி, 10 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 8 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த சரவணன் தனது குடும்பத்துடன் ஈஸ்வரன் கோவில் தெருவில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார்.
நேற்று காலை அவரது மனைவி பிள்ளைகளை பள்ளியில் விட்டுவர சென்றுவிட்டு மீண்டும் வீடு வந்தபோது சரவணன், வீட்டின் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி இருந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அழுது கூச்சலிட்டார். அவரது கூச்சல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். பிறகு சரவணன் தூக்கில் தொங்குவதைக் கண்ட அவர்கள், உடனடியாக மாதவரம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்தத் தகவலை அடுத்து அங்கு விரைந்து சென்ற மாதாவரம் காவல்துறையினர் உடனடியாக அவரது சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்தத் தற்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த மாதவரம் காவல்துறையினர் அது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
காவல்துறை விசாரணையில், சரவணன், குடும்ப சூழ்நிலை காரணமாகவும், அவசர தேவைக்காகவும் பிரபல தனியார் வங்கியில் ரூ. 5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனுக்கு முறையாக மாதத் தவணை செலுத்திவந்த சரவணன், கடந்த சில மாதங்களாக குடும்ப சூழ்நிலை காரணமாக மாதத் தவணை கட்டாமல் இருந்துள்ளார். இதனால் வங்கி அதிகாரிகள் கைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு அவரது கடன் தவணையை செலுத்துமாறு தெரிவித்துள்ளனர்.
அப்போதும் அவர் கட்டாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அந்த வங்கியின் கடன் தவணை வசூலிக்கும் முகவரான நவீன்,நேற்று காலை ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள சரவணின் வீட்டிற்கு சென்று, கடன் தவணையை உடனடியாக கட்ட வேண்டும் என அழுத்தம் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், பலர் முன்னிலையிலும், சரவணனின் குழந்தைகள் முன்னிலையிலும், அவரை தகாத வார்த்தையில் திட்டியதாக சொல்லப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த சரவணன் வீட்டில் இருந்துள்ளார். அந்த சமயம், அவரது மனைவி தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பள்ளியில் விட்டுவிட்டு வர சென்றுள்ளார். அப்போது சரவணன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். ஏற்கெனவே குடும்ப சூழ்நிலை காரணமாக மனவேதனையில் இருந்த சரவணன், வங்கி ஊழியர் வந்து வீட்டில் தகாத வார்த்தையில் பேசியதின் காரணமாக ஏற்பட்ட அவமானத்தால் மேலும், மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால், வீட்டில் யாரும் இல்லாததை அடுத்து சரவணன், மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனத் தெரியவந்தது.