![Price of tomato increased by Rs.20 more](http://image.nakkheeran.in/cdn/farfuture/KvqqbgH_FV75a0daNCnOIhzv_WhZ4A7rqcZ2Bg1sbb4/1689389784/sites/default/files/inline-images/1000_154.jpg)
கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை கிலோ 10 ரூபாய் என்று இருந்த நிலையில் கடந்த இரு வார காலமாகச் சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி 120 முதல் 150 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த தக்காளியைக் கூடுதலாகக் கொள்முதல் செய்து 62 பண்ணை பசுமை கடைகள் மூலம் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்து தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனையைத் தொடங்கிய தமிழக அரசு, முதல் கட்டமாக வட சென்னையில் 32 கடைகளிலும், மத்திய சென்னையில் 25 கடைகளிலும், தென் சென்னையில் 25 கடைகளிலும் என மொத்தம் 82 கடைகளில் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்து வருகிறது. இந்த சூழலில் பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும், பருப்பு வகைகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை நேற்றை விட இன்று கிலோவுக்கு ரூ. 20 அதிகரித்து ரூ. 140க்கு விற்கப்பட்டு வருகிறது. சில்லறை விலையில் தக்காளி விலை கிலோ ரூ. 150 முதல் ரூ. 160 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.