மேட்டூர் அனல் மின்நிலையம் மற்றும் நீர் மின்நிலையங்களில் 610 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 யூனிட்டுகளும், இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு யூனிட்டும் செயல்பட்டு வருகிறது.
இவற்றின் மூலம் நாளொன்றுக்கு 1440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். நேற்று பிற்பகலில் முதல் பிரிவில் உள்ள மூன்றாவது யூனிட்டில் 210 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. தேவை குறைவு காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டதாக, மேட்டூர் அனல் மின்நிலைய பொறியாளர்கள் தெரிவித்தனர்.
இதேபோல் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டதால், மேட்டூர் அனல் மின்நிலையம், சுரங்க மின்நிலையம் மற்றும் 5 கதவணைகளில் 400 மெகாவாட் மின்உற்பத்தி தடைப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் 610 மெகாவாட் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.