![Postponement of bail petition filed by former minister Saroja in fraud case](http://image.nakkheeran.in/cdn/farfuture/rSjxxGVRgwQO_rKuWS4W2FW2mzOKERktCw-0f1fY8pQ/1635824523/sites/default/files/inline-images/th-1_2105.jpg)
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 76 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சர் சரோஜா தாக்கல் செய்த முன் ஜாமீன் மீதான விசாரணை நவ. 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்தவர் குணசீலன். இவர், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் கடந்த வாரம் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது புகார் அளித்தார். அதில், சத்துணவுத்துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி 76.50 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாகக் கூறியிருந்தார்.
அதன்பேரில், சரோஜா மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து, அவரை தேடிவந்தனர். இதற்கிடையே, நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு சரோஜா மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி குணசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் நீதிபதி செல்வம் ஆஜரானார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.