எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
அரசு ஊழியர்களின் தபால் வாக்குகளுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேரம் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. ஜனநாயகத்தை கேலிக்குள்ளாக்கும் துணை முதல்வரின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அரசு ஊழியர்களின் 19 ஆயிரம் தபால் வாக்குகளுக்கு தினந்தோறும் ரு.150 வீதம் மாதத்திற்கு ரூ.4500 வழங்கும் வகையில் முதல்வர் உத்தரவிட்டால், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் 10 லட்சம் வாக்குகளையும் தாங்கள் பெற்றுத்தருவதாகவும் பேரம் பேசும் நபர் தெரிவிக்கின்றார். முதல்வரிடம் கடிதம் அளியுங்கள் அதற்கான ஏற்பாடுகளை நான் பார்த்துக்கொள்கிறேன் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அந்த வீடியோவில் தெரிவிக்கின்றார்.
துணை முதல்வராக இருக்கக்கூடிய ஒருவரே தபால் ஓட்டுக்களை பெற அரசு அதிகாரிகளுடன் பேரம் பேசுவதன் மூலம், நியாயமான, சுதந்திரமான ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆகவே தேர்தல் ஆணையம் இதற்கெதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல் கடந்த காலங்களில் மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்த நேரத்தில், மக்களின் துயரை போக்க நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகள், தேர்தலை கணக்கில்கொண்டு சிறப்பு நிதி உதவி திட்டத்தை அறிவித்துள்ளது. முழுக்க முழுக்க வாக்குகளுக்கான லஞ்சம் என்ற வகையிலேயே அத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை ஆளும் கட்சியை சேர்ந்தவர்களே தங்களது பொதுக்கூட்ட மேடைகளில் வெளிப்படையாக பேசிவருகின்றனர்.
ஆகவே, தேர்தல் ஆணையம் இதனை கருத்தில்கொண்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஜனநாயகத்தை பணநாயகமாக மாற்ற முயலும் ஆளும் கட்சியினரை வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.