![Police destroy liquor hoarding Kalvarayan Malai](http://image.nakkheeran.in/cdn/farfuture/s1ovZSmfrWrjwb0iPYB6Zmqwjwmn4UanZ6wbmQAAcrk/1666267647/sites/default/files/inline-images/99_42.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2200 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு; போலீசார் ரெய்டு செய்து அழித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் முழுமையாக அழிக்கப்பட வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வரும் நிலையில் கல்வராயன்மலைப் பகுதியில் கள்ளச்சாராய ஊறலை கட்டுப்படுத்தும் விதமாக கரியாலூர் போலீசார் சமீப காலமாக மலைப்பகுதிகளில் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். மழையில் மறைவான பகுதிகளில் சாராயம் காய்ச்சுவதற்காக போடப்பட்டுள்ள ஊறலை கண்டுபிடித்து அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று கரியாலூர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் தனிப்பிரிவு சிறப்பு இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் மாரியப்பன், ரவி உள்ளிட்டவர்கள் கொடுந்துறை பகுதியில் சாராய ரெய்டு பணியில் ஈடுபட்டபோது, அங்கு 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 11 பிளாஸ்டிக் பேரலில் சுமார் 2200 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டுபிடித்து அதே இடத்தில் அழித்தனர். போலீசாரின் விசாரணையில் கொடுந்துறை கிராமத்தைச் சேர்ந்த சடையன் மகன் வெங்கடேசன் என்ற சாராய வியாபாரி சாராய ஊறல் போடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து கரியாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள வெங்கடேசனை தேடி வருகின்றனர்.
கல்வராயன் மலைப் பகுதிகளில் காய்ச்சப்படும் கள்ளச்சாராயம் சேலம், திருவண்ணாமலை, பெரம்பலூர், கடலூர் போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு திருட்டுத்தனமாக கொண்டு செல்லப்படுகிறது. காவல்துறையினர் அவ்வப்போது கல்வராயன் மலைப்பகுதியில் ரெய்டுக்கு சென்று கள்ளச்சாராய ஊறல்களையும் காய்கறி சாராயத்தையும் அழித்து வருகின்றனர். அதேபோன்று கள்ளத்தனமாக துப்பாக்கி தயாரித்து இருப்பதை பறிமுதல் செய்து, அதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தும் வருகிறார்கள். ஆனால் கள்ளச்சாராயம், கள்ளத்துப்பாக்கி ஆகிய இரண்டும் கல்வராயன் மலையை விட்டுப் பிரிக்க முடியாத முற்றிலும் ஒழிக்க முடியாத நிலையே தொடர்கிறது. இதற்கு காவல்துறை எப்போது தான் முற்றுப்புள்ளி வைக்குமோ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.