நாளை, பிப்ரவரி 14 ஆம் தேதி, பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாக கடந்த மாதம் 31 தேதி தகவல்கள் வெளியாகி இருந்தன. அண்மையில் டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்த நிலையில், பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியானது. மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களைத் தொடங்கி வைக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் பிரதமர் வருகையை ஒட்டி சென்னையில் நாளை 5 மணிநேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. நாளை காலை 8 மணி முதல் மதியம் ஒருமணி வரை இந்தப் போக்குவரத்து மாற்றம் நடைமுறையில் இருக்கும். சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் சென்னை பெருநகர எல்லைக்குள் வர அனுமதியில்லை. கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் வரும் வாகனங்கள் நாயர் பாலத்தின் வழியாக அண்ணா சாலை செல்லலாம். ராயபுரத்தில் இருந்து பாரிமுனை செல்லும் வாகனங்கள் இப்ராகிம் சாலை மிண்ட் சந்திப்பு வழியாக செல்லலாம். அண்ணா சாலையில் இருந்து ராயபுரம் செல்லும் வாகனங்கள் ஸ்பென்சர், பொன்னி சாலை, நாயர் பாலம் வழியாக செல்லலாம். சவுத்கெனால்ரோடு - காந்திசாலை செல்ல கச்சேரி சாலை, லஸ், ராயப்பேட்டை சாலை வழியாக செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்.14 தமிழகம் வரும் பிரதமர் மோடி பிரச்சாரமும் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிப்.14 காலை 7.50 க்கு புறப்பட்டு 10.35 க்கு சென்னை வரும் பிரதமர், மூன்றுமணி நேரம் மட்டுமே சென்னையில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.