சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சுற்றுலா மையம் உள்ளது. இங்கு 5 ஆயிரம் ஏக்கர் சதுர மீட்டர் பரப்பளவில் இயற்கை சூழலுடன் மருத்துவ குணம் கொண்ட சதுப்புநிலக்காட்டில் சுரப்புண்ணை, தில்லை, திப்பராத்தி, வெண்கண்டல், நீர்முள்ளி, பண்ணுக்குச்சி, நரிகண்டல், கருங்கண்டல் எனும் 20 வகையான தாவரங்களும், வங்காரவாசி, உயிரி, கோழிக்கால், உமிரி, சங்குசெடி, பீஞ்சல் உள்ளிட்ட 18 வகையான மூலிகை தாவரங்களும் உள்ளது. மாங்குரோவ் காடுகளில் மூலிகை செடிகள் நிறைந்திருப்பதால் வனத்துறையினர் கட்டுபாட்டில் உள்ளது.

இந்த சதுப்புநிலக்காட்டில் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்வாய்களும் ஒரே மாதிரியான அமைப்பை கொண்டவையாக உள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பிச்சாவரம் சதுப்புநிலக்காடுகளில் படகு சவாரி செய்து காடுகளிலுள்ள இயற்கை வளங்களை ரசித்து செல்லும் வகையில் தினசரி வருகின்றனர். தற்போது, கோடை காலம் துவங்கி வெயில் வாட்டி வதைப்பதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தினசரி காலை முதலே சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த புதனன்று மே தின விடுமுறை என்பதால், வழக்கத்திற்கு மாறாக பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
பிச்சாவரம் இந்த பகுதி மக்களின் ஏழைகளின் ஊட்டியாக திகழ்கிறது என்கிறார் சீர்காழி பகுதிகளில் இருந்து படகு சவாரி செய்ய வந்த சிவக்குமார் என்பவர். மேலும் அவர் கூறுகையில் கோடை விடுமுறை காலத்தில் தமிழகத்திலுள்ள ஊட்டி, கொடைகானல் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அங்குள்ள குளிர் காற்றை ரசித்து படகு சவாரி செய்து மகிழ்ந்து வருவார்கள். இதற்கு செலவு அதிகமாகும், ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு அங்குசெல்வது சிறமமாக இருக்கும். எனவே குறைந்த செலவில் குடும்பத்துடன் குதூகலமாக படகு சவாரி செய்து மகிழ பிச்சாவரம் சுற்றுலா மையம் ஏற்ற இடமாக உள்ளது. தண்ணீரும் முழங்கால் அளவுக்கு உள்ளதால் படகு சவாரி செய்யும் போது சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் காலையிலே படகு சவாரி தொடங்கி மாலை 6 வரை இருக்கும். தற்போது வனத்துறை கெடுபிடி விதித்துள்ளதால் காலை 9 மணிக்கு தொடங்கி 4 மணியுடன் முடித்து விடுகிறார்கள். இதனால் தொலைதூரத்திலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகிறார்கள். இதனை அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு படகுசவாரி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளார். இந்த கோரிக்கை அனைத்து சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாகவும் உள்ளது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.