சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளாயே எனக்கேட்டு ஊரார் கேலி பேசியதால் அவமானத்தில், கூலித்தொழிலாளி விஷ மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கடல் கருப்பு ரெட்டியூரைச் சேர்ந்தவர் பரமசிவம் (வயது 45). கூலித்தொழிலாளி. இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் உறவினர் ஒருவரின் மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், அவரை மேட்டூர் மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
அண்மையில் அவர், பிணையில் சிறையில் இருந்து வெளியே வந்தார். வெளியே வந்த அவரை உறவினர்கள் திட்டியதுடன் குத்தலாக கேள்வி கேட்டு அவமானப்படுத்தி உள்ளனர். போக்சோ வழக்கில் சிறைக்கு சென்றதில் இருந்தே விரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், மே 3- ஆம் தேதியன்று, தென்னை மரத்திற்கு வைப்பதற்காக வீட்டில் வைத்திருந்த விஷ மாத்திரைகளை தின்றுள்ளார்.
சிறிது நேரத்தில் அவருக்கு குமட்டலும் வாந்தியும் வந்தது. அப்போது வீட்டுக்கு வந்த அவருடைய மகன்கள், ஏன் வாந்தி எடுக்கிறீர்கள்? என்று கேட்டபோது, விஷ மாத்திரைகள் தின்று தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த மகன்கள், அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக அவரை அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி உயிரிழந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து கருமலைக்கூடல் காவல்நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.