![Oxygen will be produced in Theni district too - Minister I. Periyasamy's speech](http://image.nakkheeran.in/cdn/farfuture/YjQlqk1ndLFZiRBTDMwjXUzC7zelYfG4xhLw_XpfKG4/1622048933/sites/default/files/inline-images/iperi1.jpg)
தேனி மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த கூட்டரங்கில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
தேனி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், மாவட்ட எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்வி, பெரியகுளம் சார் ஆட்சியர் சினேகா, துணை ஆட்சியர் பயிற்சியர் யுரேகா, மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகாராஜன, பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணகுமார், போடி எம்.எல்.ஏ. ஓ.பன்னீர்செல்வம், கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன். சுகாதாரத்துறை, வருவாய்துறை, உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
2 மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த ஆய்வு கூட்டத்தில் தேனி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுகள் மற்றும் ஆலோசனை நடத்தப்பட்டது.
அதன் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய கூட்டுறவுதுறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ''தேனி மாவட்டத்தில் கரும்பூஞ்சை தொற்றால் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை. தேனி மாவட்டத்திற்கு கருப்பு பூஞ்சை தொற்றுக்கான மருந்து விரைவில் வழங்கப்பட உள்ளது. மேலும் அத்தியாவசியத் தேவையான ஆக்சிஜன் உற்பத்தி மையம் அனைத்து மாவட்டங்களிலும் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்திலும் ஆக்சிஜன் உற்பத்தி மையம் விரைவில் அமைக்கப்படும்'' என தெரிவித்தார்.
மேலும் ''ஊரடங்கு காரணமாக காய்கறிகள் பொதுமக்கள் வீட்டிற்கே சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பும் போது ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனை செய்த பின்பே வீட்டிற்கு அனுப்புகின்றோம்'' என்று கூறினார்.