![childrens marriage salem district omalur](http://image.nakkheeran.in/cdn/farfuture/n07mU6dHhFDWc3ypBY_cKHJm_oFYFjWZlqnl4ZszGpQ/1654655175/sites/default/files/inline-images/child-marriage_8.jpg)
ஓமலூர் அருகே, 13 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த சிறுமியின் பெற்றோர், கணவர், அவருடைய பெற்றோர் உள்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள செங்கானூரைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட சமூகநல அலுவலர் ரஞ்சிதாதேவிக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து, அவர் தலைமையிலான அலுவலர்கள் குழு, செங்கானூருக்குச் சென்று நேரில் விசாரணை நடத்தினர். இதில், காரிப்பட்டி கொடம்புகாடு பகுதியைச் சேர்ந்த குமார் & சத்யா தம்பதியினர், அவர்களுடைய 13 வயது சிறுமியை கடந்த பிப்ரவரி 14- ஆம் தேதி, செங்கானூர் அருகே உள்ள கொல்லப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் & புவனேஸ்வரி தம்பதியின் மகன் சிவகுமாருக்கு திருமணம் செய்து வைத்திருப்பது தெரிய வந்தது. செங்கானூர் பெருமாள் கோயிலில் வைத்து திருமணத்தை முடித்துள்ளனர்.
இதுகுறித்து ரஞ்சிதாதேவி, ஓமலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், குழந்தை திருமணம் தடைச் சட்டத்தின் கீழ் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த குமார், சத்யா, பெருமாள், சிறுமிக்கு தாலி கட்டிய சிவகுமார் ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
காவல்நிலையம் வரை விவகாரம் சென்றதை அறிந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை மணந்த மணமகன் பெற்றோர், கணவர் ஆகியோர் தலைமறைவாகினர். அவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.