சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (23), கடந்த 23.6.2015ம் தேதி மாயமானார். மறுநாள் மாலையில், திருச்செங்கோட்டை அடுத்த கிழக்கு தொட்டிப் பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜ் சடலம் கைப்பற்றப்பட்டது. அவர் தலை துண்டிக்கப்பட்டுக் கிடந்தார்.
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், ஆதிக்க சாதியினரால் ஆணவக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவருடைய தம்பி தங்கதுரை உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஆகஸ்ட் 30, 2018ம் தேதி முதல் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணை நடந்து வருகிறது. கைதான 17 பேரில் இருவர் தவிர யுவராஜ் உள்ளிட்ட 15 பேரும் ஆஜராகி வருகின்றனர். கடந்த 12.12.2018ம் தேதி நடந்த சாட்சிகள் விசாரணையைத் தொடர்ந்து டிசம்பர் 20ம் தேதிக்கு அடுத்தக்கட்ட விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, வியாழக்கிழமை (டிசம்பர் 20, 2018) அன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில் ஐந்து சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு இருந்தது. அவர்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் (விஏஓ) சிலரும் அடங்குவர். ஆனால் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விஏஓக்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அவர்கள் சாட்சி சொல்ல நீதிமன்றத்திற்கு வர இயலாது என பதில் அளித்தனர்.
இதனால் சாட்சிகள் விசாரணையை ஜனவரி 5ம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார். சாட்சிகள் விசாரணை ஆரம்பித்தில் இருந்து இன்றுதான் முதல்முறையாக ஒரு சாட்சிகூட விசாரிக்கப்படாமலேயே வாய்தா தேதி வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.