கனல் கண்ணன் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்து முன்னணி அமைப்பு சார்பில் "இந்துக்களின் உரிமை மீட்புப் பிரச்சார பயணம்" என்ற நிகழ்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. அப்பயணத்தின் நிறைவு விழாவில் பேசிய திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன், "ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தினமும் ஒரு லட்சம் பேர் தரிசனத்திற்காக செல்கின்றனர். ஆனால் அக்கோவிலின் எதிரே கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை இருக்கிறது. அது எப்பொழுது உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்" என்று பேசியிருந்தார். இந்தப் பேச்சு சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கடந்த 15.8.2022 அன்று கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பிரமுகர் குமரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஒன்றை செய்திருந்தார். அதில், வழக்குப்பதிவு செய்து ஐந்து மாதங்களாகியும் கனல் கண்ணன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனத் தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், பெரியார் சிலை பற்றி சர்ச்சையாகப் பேசிய கனல் கண்ணன் மீது மூன்று மாதத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.