![Once again Chennai Sangamam is being led by Kanimozhi](http://image.nakkheeran.in/cdn/farfuture/Z8SCZIgb8FA2t2phvrMyvNzMmqpwwtoqjzNsFIlgREM/1672218981/sites/default/files/inline-images/th_3562.jpg)
பொங்கல் பண்டிகையின்போது தமிழக நாட்டுப்புறக் கலையின் சங்கமமான 'நம்ம ஊரு திருவிழா' சென்னையில் நடைபெறவுள்ளது.
இதற்கான இடங்களை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. மற்றும் சந்தீப் நந்தூரி ஐ.ஏ.எஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர். குறிப்பாக சென்னை கே.கே.நகரில் உள்ள சிவன் பூங்கா, மயிலை நாகேஸ்வர ராவ் பூங்கா மற்றும் செம்மொழிப் பூங்கா ஆகிய பகுதிகளில் ஆய்வு மேறகொண்டனர்.
நாட்டுப்புறக் கலைகளுக்கு மாபெரும் அங்கீகாரம் அளிக்கும் வகையிலும், அவர்களின் கலைக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் ‘நம்ம ஊரு திருவிழா’ என்ற நிகழ்ச்சி நடத்தப்படும் என்று 2022 - 2023 ஆம் நிதியாண்டில் சட்டப்பேரவையின் மானியக் கோரிக்கையின் போது தெரிவிக்கப்பட்டது.
சென்னையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நடைபெறும் ‘நம்ம ஊரு திருவிழா’வின் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பும் கலைக்குழுக்கள் தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் வகையில் 5 நிமிட வீடியோவை குறுந்தகடு அல்லது பென்டிரைவில் பதிவு செய்து மண்டல உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மறைந்த திமுக தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்த 2006 - 2011 ஆட்சிக்காலத்தில், கனிமொழியின் முன்னெடுப்பில் 2007 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது சென்னையில் பல்வேறு இடங்களில் ஒரு வாரக்காலம் நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகள் ‘சென்னை சங்கம் விழா’ என்ற பெயரில் நடத்தப்பட்டது. தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரி மைதானத்தில் கடந்த ஜூலை மாதம் 4 நாட்களுக்கு நெய்தல் திருவிழாவை வெற்றிகரமாக கனிமொழி எம்.பி. தலைமைத் தாங்கி நடத்தினார். சென்னை சங்கமம் மற்றும் நெய்தல் கலைத் திருவிழா பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.