கடந்த வாரம், ஓலா கால் டாக்ஸி டிரைவர் வாடிக்கையாளராக வந்த சிலரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் சென்னை அருகே ஓலா கார் டாக்ஸி ஓட்டுநர் தாக்கியதில் வாடிக்கையாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்துள்ளது கன்னிவாக்கம் கிராமம். கன்னிவாக்கம் கிராமம் குந்தன் நகர் பகுதியில் வசித்து வந்தவர் உமேந்தர். கோவையில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்த உமேந்தர், வார இறுதியில் சொந்த ஊரான கன்னிவாக்கத்திற்கு வருவது வழக்கம். எப்பொழுதும்போல் கடந்த வெள்ளிக்கிழமை கன்னிவாக்கத்தில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார் உமேந்தர். அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் சினிமா பார்ப்பதற்காக மனைவி பவ்யா, குழந்தைகள், சகோதரி மற்றும் அவரது இரு குழந்தைகள் உட்பட ஏழு பேருடன் ஷாப்பிங் மாலுக்கு சென்றுள்ளார். பின்னர் படம் பார்த்துவிட்டு வீடு திரும்புவதற்காக மனைவி பவ்யாவின் சகோதரி தேவிபிரியாவின் செல்போனிலிருந்து உமேந்தர் ஓலா கால் டாக்ஸி புக் செய்துள்ளார்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த இன்னோவா காரில் அனைவரும் ஏறிக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஓலா கார் ஓட்டுநர் ரவி பயணத்தை தொடங்குவதற்கான ஓ.டி.பி எண்ணை சொல்லுமாறு கேட்டுள்ளார். அப்பொழுது உபேந்தர் தனது செல்போனை சோதித்துப் பார்த்துவிட்டு ஓ.டி.பி வரவில்லை என தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த கார் ஓட்டுநர் ஓ.டி.பி வரவில்லை என்றால் காரை விட்டு இறங்குங்கள் என காட்டமாக கூறியுள்ளார். அதற்கு உபேந்தர் இறங்க முடியாது என தெரிவித்துள்ளார். இப்படி ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியது. அதன் பிறகு காரை விட்டு இறங்கிய உமேந்தர் காரின் கதவை 'சடார்...' என்று வேகமாக சாத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் ரவி 'ஏன் கார் கதவை வேகமாக சாத்தினாய்' என்று கேட்டு உமேந்தரை அடித்துள்ளார். உமேந்தரும் பதிலுக்கு கையில் இருந்த கூல்ட்ரிங்ஸ் பாட்டிலால் ரவியை அடித்ததாக கூறப்படுகிறது. வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதில் சரமாரியாக உமேந்தரை ரவி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்தார் உபேந்தர். அங்கிருந்த பொதுமக்கள் உபேந்தரை மீட்டர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர். ஆனால் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் தப்பி ஓட முயன்ற ஆலோ ஓலா கார் ஓட்டுநர் ரவியை பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள வ.உ.சி நகரைச் சேர்ந்த ஓலா ஓட்டுனர் ரவி மீது கொலை வழக்குப்பதிவு செய்து கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் செங்கல்பட்டு அருகே ஓலா டாக்சி ஓட்டுநர் வாடிக்கையாளர்களாக வந்த திருடர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் ஐடி ஊழியர் ஒருவர் ஓலா கார் ஓட்டுநரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.