
கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி (60) உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனிகே.பாலச்சந்தரின் புன்னகை மன்னன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து பல்வேறு படங்களில் நடித்து வந்தார். விஜய் நடித்த பத்ரி படத்தில், விஜய்க்கு பயிற்சி கொடுக்கும் ஆசிரியராக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதைத் தவிர்த்து 400க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்து, தமிழகத்தில் நவீன வில்வித்தைக்கு முன்னோடியாக இருந்துள்ளார்.
இந்த சூழலில் சமீபகாலமாக தனது உடல்நிலை மோசமடைந்து வருவதாக ஊடகங்களின் பேட்டியின் மூலம் தெரிவித்திருந்தார். மேலும் தனக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாகவும் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் 22 நாட்களாக தொடர் சிகிச்சையில் இருந்த அவர் நேற்று நள்ளிரவு 1:45 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. திரைத் துறையினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள வில்வித்தை சங்க அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பின்னர் அவரது உடல் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.