
கோவில்பட்டி பகுதியில் உள்ள கதிரேசன் கோவில் மலை அடிவார பகுதியில் வீடு ஒன்றில் தடை செய்யப்பட்ட பான் மசாலா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன், இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், எஸ்.ஐ. ராமச்சந்திரன், போலீசார் மணிகண்டன், திருப்பதி, சிவா கொண்ட ஸ்பெஷல் டீம் சனிக்கிழமை இரவு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் வேகமாக வந்த மகாராஷ்டிரா பதிவெண் கொண்ட வாகனத்தை வழிமறித்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அந்த காரில் 5 மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 335 பாக்கெட்கள் பான் மசாலா புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார், காரில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், அந்த நபர் விருதுநகர் மாவட்டம் உப்பத்தூரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜ்குமார் (31) என்பது தெரியவந்தது. இதையடுத்து, மஹாராஷ்டிரா பதிவெண் கொண்ட கார் குறித்து நடத்திய விசாரணையின் போது, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிலருக்கும் கோவில்பட்டி காந்திநகர், பாரதி நகர் மற்றும் வீரவாஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த கஞ்சா வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கும் தொழில் ரீதியாக தொடர்பு இருப்பதும், இரு தரப்பும் கூட்டணி போட்டு பல சொகுசு கார்களில் பயணித்து பெங்களூருவில் இருந்து மொத்தமாக பான் மசாலா புகையிலை பொருள்களை கொள்முதல் செய்து கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளுக்கு வட மாநில தொழிலாளர்கள் மூலமாக சப்ளை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
பிடிபட்ட ராஜ்குமார் கொடுத்த தகவலின் பேரில், கோவில்பட்டி புறநகர் பகுதியில் சொகுசு பங்களா ஒன்றில் தங்கியிருந்த முக்கிய புள்ளியான ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த காந்தி லால் பரோடா ஜல்வார் மகன் செவன் குமார் (29) என்பவரை ஸ்பெஷல் டீம் போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த நெட்வொர்க்கில் ஐக்கியமாகியுள்ள மேலும் சிலரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ராஜஸ்தான் நபர்கள், வட மாநில தொழிலாளர்களை பயன்படுத்தி அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா புகையிலை பொருட்களை தாராளமாக கடத்தி கொண்டு வந்து, தென் மாவட்ட பகுதிகளில் ஏரியா வாரியாக சப்ளை செய்து கல்லா கட்டிய சம்பவம் போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
செய்தியாளர்: மூர்த்தி