Skip to main content

கல்லூரி பேருந்தை கடத்திச் சென்ற மாணவன்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 24/03/2025 | Edited on 25/03/2025

 

A student hijacked a college bus with his friends in pudukottai

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது.  இந்த கல்லூரியில் இயங்கி வந்த பேருந்து ஒன்று மாலை நேரத்தில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டுவிட்டதாக ஆலங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து ஆலங்குடி போலீசார் மாவட்டம் முழுவதும் தகவல் கொடுத்து சோதனையை முடுக்கிவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் ஆலங்குடியில் காணாமல் போன கல்லூரி பேருந்து, அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே சென்ற போது நின்றுவிட்டது. அதனால் பேருந்தை ஓட்டி வந்த நபர்கள், அப்பகுதியில் நின்றவர்களை அழைத்து பேருந்தை தள்ளிவிடக் கேட்டுள்ளனர். ஆனால், அதன் பிறகும் பேருந்தை இயக்கமுடியாத சூழல் ஏற்பட்டபோது தான், பேருந்து டீசல் இல்லாமல் நின்றுள்ளது என்பது தெரிந்தது. அதனால் பேருந்தை ஓட்டி வந்தவர்கள், சாலையிலேயே நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி போலீசார், ஆலங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அறந்தாங்கி போலீசாரின் தகவலைப் பெற்று ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட போலீசார் அறந்தாங்கி விரைந்து சென்று காணாமல் போன கல்லூரிப் பேருந்தை மீட்டு வந்தனர்.

இதனை தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில் சம்மந்தப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் 3ம் ஆண்டு படிக்கும் அறந்தாங்கி சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவன், மாலை நேரத்தில் ஒரு பைக்கில் 2 பேரை அழைத்துக் கொண்டு கல்லூரிக்குள் வந்துள்ளார். அதன் பிறகு, அவர் அங்கு நின்ற பேருந்தை ஓட்டிக்கொண்டு வெளியே வந்துள்ளார். இது குறித்து நுழைவாயிலில் நின்ற காவலர் கேட்ட போது, ஸ்பேர் பஸ் எடுத்து வரச் சொன்னதாக கூறிவிட்டு சென்றுள்ளனர். பேருந்து வெளியே சென்ற பிறகு தான், அந்தப் பேருந்து அதே கல்லூரி மாணவர் மற்றும் அவரது நண்பர்களால் கடத்தப்பட்டுள்ளது தெரிந்துள்ளது. 

இந்தப் பேருந்தை திட்டமிட்டு கடத்தியதால் ஏதேனும் தவறான எண்ணத்தில் கடத்தி இருப்பார்களோ? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆலங்குடி போலீசார் பேருந்தை கடத்திய மாணவர் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்