ஜெயலலிதா உயிருடன் இருந்தவரையிலும் ‘தாயே! தங்கத்தாரகையே! குலசாமியே!’ என்று விதவிதமாகப் போற்றி, தங்களின் காலத்தைக் கழித்து வந்தார்கள் அமைச்சர்கள். ஜெயலலிதா அளவுக்கு இல்லையென்றாலும், ஓரளவாவது இன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் புகழ் பாடியே தீரவேண்டும் என்று முடிவெடுத்து விட்டார்கள். தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியும், தன்னால் இயன்ற அளவுக்கு எடப்பாடியின் கொடியைத் தூக்கிப்பிடித்து வருகிறார்.
தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் சார்பில், முதல் மாநில மாநாடு சிவகாசியில் நடந்தது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, சிவகாசி பட்டாசுகளின் அருமை, பெருமைகளையும், தேவையையும், மாசு வழக்கினால் சந்தித்துவரும் இடையூறுகளையும் விரிவாகப் பேசிவிட்டு, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ‘பட்டாசுத் தொழிலின் பாதுகாவலர், நல்லாட்சியின் நாயகர்’ என்றெல்லாம் புகழ்ந்து தள்ளினார்.
அரசியலில், ஜால்ராக்களின் காட்டில் மழை பெய்வதெல்லாம் சகஜமாகிவிட்ட நிலையில், ஆத்திச்சூடியில் ‘செய்வன திருந்தச் செய்’ எனப்பகன்ற ஔவையின் வாய்மொழியை, அப்படியே கடைப்பிடிக்கிறார்கள் போலும்!