புதுச்சேரி முக்கிய அரசியல்வாதிகளான நாராயணசாமி, ரெங்கசாமி உள்ளிட்ட பலரும் அரசியல் முடிவுகள் எடுக்கும் முன்பு புதுக்கோட்டை வந்து சுவாமி தரிசனத்திற்கு பிறகே முடிவுகள் எடுப்பது வழக்கம். அந்த வகையில் வெள்ளிக்கிழமை மாலை புதுக்கோட்டையிலுள்ள புவனேஸ்வரி அவதூத வித்யாபீடம் சன்னிதானத்திற்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சாமி தரிசனம் செய்ய வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது..
நீட் தேர்வால் 3 மாணவிகள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததற்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும். மாணவ மாணவிகள் தேர்வில் தோல்வியடைந்தால் மனம் தளராமல் இருக்க வேண்டும்.
இந்த மாதம் டெல்லியில் நடைபெற உள்ள லோக் ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து கட்சி தலைமை மற்றும் மற்ற மாநில முதலமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பேன். இந்த அமைப்பு அதிகாரமில்லாத அமைப்பு என்றும் அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஏற்கனவே பிரதமருக்கு எழுதிய கடிதத்தை எனக்கும் அனுப்பி உள்ளார் அது குறித்து பரிசீலனை செய்வேன்.
தற்போதைய புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தினம் தினம் எங்கள் ஆட்சிக்கு தொல்லை கொடுத்து வருகிறார். ஒவ்வொரு நாளும் போராடி போராடியே மக்கள் நலத்திட்டங்களை செய்து வருகிறோம். அவரது போக்கு மாறவில்லை ஆனால் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு ஆளுநர் கிரண்பேடி அடங்கியுள்ளார்.
புதுச்சேரி ஆளுநராக பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சாமி நியமிக்கப்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது குறித்த கேள்விக்கு.. அவரை முதலில் மத்திய அரசு புதுச்சேரி ஆளுநராக நியமிக்கட்டும் அதன் பிறகு நான் பதில் கூறுகிறேன்.
இந்தி திணிப்பை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இருமொழிக் கொள்கை தான் எங்களுடைய நிலைப்பாடு என்றார்.