கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் வீராணம் ஏரி சென்னை மக்களின் தாகம் தீர்த்து வருகிறது. ஏரியின் மூலம் சுமார் 44ஆயிரத்து756 இயக்க ஏக்கர் ஆயிரம் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது.
மேட்டூரில், பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர், கல்லணை வழியாக, கொள்ளிடம் ஆற்றில் கீழணையில் தேக்கப்படும். அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்படும். இந்த ஆண்டு போதிய மழை இல்லாதது, மேட்டூரில் தண்ணீர் இல்லாத காரணத்தால் வீராணம் ஏரியில் நீர் வரத்து இல்லாமல் போனது. ஜனவரி முதலே ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக குறையத் தொடங்கிய பின்னர் முற்றிலும் வறண்டு போனது.
இதனையடுத்து மாற்று ஏற்பாடக கடலுார், விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போடப்பட்ட போர்வெல் தண்ணீர், வாலாஜா ஏரி தண்ணீர், என்எல்சி சுரங்க தண்ணீர் ஆகியவை சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது சென்னையில் ஏற்பட்டுள்ள கடும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் பொருட்டு சென்னையின் தண்ணீர் தேவையைக் கருதி் வீராணத்திற்கு தண்ணீர் அனுப்ப அரசு உத்தரவிட்டது. இதனையொட்டி மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 25 ஆம் தேதி வீராணம் ஏரிக்கு வந்தடைந்தது.
இந்நிலையில் ஏரிக்குள் வந்துகொண்டிருக்கும் தண்ணீர் பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது. கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சாயக்கழிவுகள் கலந்திருக்கலாமோ என்ற அச்சம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சிதம்பரம் பொதுப்பணித்துறை நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் கூறுகையில், வீராணம் ஏரி தண்ணீர் இல்லாமல் வறண்டு இருந்த போது பச்சைநிற பாசிகள் ஏரியில் இருந்தது. தற்போது ஏரிக்கு குறைவான தண்ணீர் வருவதால் அந்தத் தண்ணீரில் பாசி கலந்து பச்சை நிறத்தில் தண்ணீர் உள்ளது. தண்ணீர் பச்சை நிறத்தில் உள்ளதைக் கண்டு சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தண்ணீரை மாதிரிக்கு எடுத்து சோதனைச் செய்துள்ளனர். அதில் தண்ணீரில் எந்த ரசாயன கலவையும் இல்லை எனத் தெரியவந்துள்ளது. எனவே பொதுமக்கள் வீராணம் தண்ணீர் பச்சை நிறத்தில் உள்ளதைக் கண்டு அச்சமடைய தேவையில்லை என அவர் தெரிவித்தார்.