![Officers raided Chennai soolai; 5 kg gutka seized](http://image.nakkheeran.in/cdn/farfuture/eD7gG68L1gz7KAG8gkJNMHnUsa5v3dQWk_Ms9nZz2LM/1692702123/sites/default/files/inline-images/a1197.jpg)
சென்னை சூளைப் பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்ட பொழுது ஒரு கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடையில் இருந்த தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
சென்னை சூளை பகுதியில் உள்ள சாமிப்பிள்ளை தெருவில் உள்ள கடையில் திடீரென உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர். தமிழ்நாடு உணவுப் பொருள் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஆறுமுகம் உள்ளிட்ட ஐந்து பேர் இந்த கடையில் இன்று சோதனை நடத்தினர். அப்பொழுது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கூல் லிப், ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட பொருட்கள் ஆதியப்பன் என்பவருக்கு சொந்தமான அதிதி என்ற கடையில் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. ரகசியத் தகவலின் அடிப்படையில் அந்தக் கடையில் சோதனையில் ஈடுபட்டதாக அங்கு வந்திருந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ஐந்து கிலோ கொண்ட தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு, கடையை மூடி வெளியே நோட்டீஸ் ஒட்டி விட்டு சென்றனர்.