
திருவாரூரில் நான்காவது நாளாக ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சாலைமறியல் போராட்டத்தில்ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று நான்காவது நாளாக திருவாரூரில் சத்துணவு ஊழியர்கள் 21 மாத நிலுவை தொகையை உடனே வழங்கவேண்டும், ஊதிய ஊயர்வு செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட சென்றனர். ஆனால் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட அனுமதி மறுத்துவிட்டனர்.
இதனையடுத்து சத்துணவு ஊழியர்கள் 500 க்கும் மேற்பட்டவர்கள் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருவாரூர் தஞ்சை தேசியநெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைதுசெய்தனர்.