நீதிமன்றத்தில் ஆள்மாறாட்டம் செய்து, விசாரணைக்கு ஆஜரான பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலத்தைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி. இவருக்கு சொந்தமாக தீவட்டிப்பட்டியில் ஒரு கிழங்கு அரவை ஆலை உள்ளது. இந்த ஆலையை 6 பேர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தனர். குத்தகை ஒப்பந்தத்தில் மோசடி நடந்திருப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் ஆசைத்தம்பி சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
அதன்பேரில் காவல்துறையில் புகாரில் கூறப்பட்டிருந்த 6 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை ஓமலூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர், சேலம் மாவட்ட 6வது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 8, 2019) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
புகார்தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது இந்த வழக்கில் ஆஜராகி உள்ள 6 பேரில் புஷ்பா என்பவருக்குப் பதிலாக வேறு ஒரு பெண் ஆள்மாறாட்டம் செய்து ஆஜராகி இருப்பதாக நீதிபதியிடம் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகி இருந்த பெண்ணின் பெயர் விவரங்களை கேட்டார். அப்போது அவர், சேலம் ரெட்டியூரைச் சேர்ந்த கவுரிசங்கர் மனைவி கார்த்திகா (43) என்பது தெரிய வந்தது.
இதனால் நீதிமன்ற அரங்கத்திற்குள் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆள்மாறாட்டம் செய்த கார்த்திகாவை நீதிமன்ற ஊழியர்கள் பிடித்துச் சென்று, அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கார்த்திகாவை காவல்துறையினர் கைது செய்தனர்.