முந்தைய நாள் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவர்கள் அடுத்தநாளே கை, காலில் மாவுக்கட்டுப் போட்டுக் கொண்டு பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டோம் என்கிறார்கள். தவறு செய்பவர்களுக்குப் போலீசார் கொடுக்கும் ஷாக் ட்ரீட்மெண்ட் என காவல்துறைக்கு ஆதரவாக பலர் முட்டுக்கொடுத்தாலும், இது மனித உரிமை மீறல் என காவல்துறைக்கு எதிர்க்கொடி பிடிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். அதிலும் ஒரு படி மேலே சென்று " அந்த பாத்ரூம்" பற்றி தகவல் அறியும் சட்டத்தில் தகவல் கோரியிருக்கின்றார் நெல்லையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர்.
சமீபகாலமாக செயின் பறிப்பவன் தொடங்கி பிக்பாக்கெட் திருடன், கத்தியுடன் உலா வந்த மாணவர்கள், போலீசுடன் ரவுசு செய்தவர்கள் என பலர் போலீசாரிடம் சிக்கி கை கால் உடைக்கப்பட்டு மாவுக்கட்டுடன் திரும்புகின்றனர். இது மனித உரிமைக்கு எதிரானது என்றும் அப்பட்டமான மனித உரிமை மீறல் என காவல்துறைக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் வேளையில் பாளையங்கோட்டை கேடிசி நகரை சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா என்பவர் இதுப்பற்றி மாநில காவல்துறை இயக்குநரிடம் தகவலறியும் உரிமைச்சட்டத்தினில் பல தகவல்களை கேள்விகளாக கோரியுள்ளார்.
அதிலிருந்து, "காவல்நிலையங்களில் உள்ள கழிப்பிடங்களில் வழுகி விழுந்து கை, கால் முறிவு ஏற்பட்ட காவலர்கள் கடந்த 2010-19 வரை எத்தனை பேர் என்ற விவரம் காவல்நிலையம் வாரியாக மாவட்டம் வாரியாக தரவேண்டும் என்பதில் ஆரம்பித்து காவல்நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட விசாரணை கைதிகள் எத்தனை பேர் கடந்த 2010-19 வரை கழிப்பிடத்தில் வழுக்கி விழுந்து கை, கால் முறிவு ஏற்பட்டுள்ளார்கள் என்ற விவரம் காவல் நிலையம் வாரியாக மாவட்டம் வாரியாக தனித்தனியே தருக!" என தகவல்களை கோரியவர், தொடர்ந்து, " தமிழ்நாட்டில் உள்ள காவல்நிலையங்களில் அமையப்பெற்றுள்ள கழிப்பிடங்களில் விசாரணை கைதிகள் விழாமல் இருப்பதற்காகவும், காவலர்கள் விழாமல் இருப்பதற்காகவும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, காவல்நிலையங்களில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்கு ஒவ்வொரு காவல்நிலையங்களிலும் எத்தனை பணியாளர்கள் சுகாதார பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் பணிபுரிகிறார்கள் என்றும், காவல்நிலையங்களில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்கு ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது என்ற விவரத்த்துடன் இல்லாமல் "தமிழ்நாட்டில் உள்ள காவல்நிலையங்களில் குற்றம் சாட்டப்பட்ட நபரை விசாரணைக்கு அழைத்து சென்று காவலர் சீருடையில இல்லாத நபர்களால் கை, கால்கள் முறிக்கப்படுகிறது எனில் காவலர்கள் சீரூடையில் இல்லாத ரௌடிகள் மூலம் கை, கால்கள் முறிக்கப்படுகிறது எனில் ரௌடிகளுக்கு கொடுக்கப்படும் ஊதியம் எவ்வளவு? என்றும், காவல்நிலையங்களில் குற்றம் சாட்டப்பட்ட நபரை விசாரணைக்கு அழைத்து வந்து கழிப்பிடத்தில் வழுகி விழுந்து கை, கால் எலும்பு முறிவு ஏற்பட்ட வகைக்கு எத்தனை காவலர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் காவல் நிலையம் வாரியாக தனித்தனியே தருக." எனவும் தகவல் கோரியுள்ளார். இதனால் காவல்துறை மட்டத்தில் பலத்த அதிர்வு ஏற்பட்டுள்ளது.