நெய்வேலி என்எல்சி நிறுவனம் மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக கடலூர் மாவட்டம் விருத்தாசலம், புவனகிரி வட்டாரங்களில் உள்ள 40 கிராமங்களில் இருந்து 12,125 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் முயற்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விருத்தாசலம் அருகேயுள்ள கம்மாபுரத்தில் தி.மு.க சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
முன்னாள் அமைச்சரும், திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் துரை.கி.சரவணன் முன்னிலையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் 40 கிராம மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க நினைக்கும் என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்தும், அதற்கு துணை நிற்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் உரையாற்றினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், என்எல்சி நிறுவனத்திற்காக அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் தங்கள் நிலங்களை கொடுத்து தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வேலை கொடுக்கவில்லை, போதுமான இழப்பீடு கொடுக்கவில்லை. என்எல்சி நிறுவனம் நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கொடுக்காமல் ஏஜென்சி மூலம் வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை கொடுத்து வருகிறது.
திமுக ஆட்சியில் இருக்கும் போதுதான் நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பும், அதிகபட்சமாக 6 லட்சம் இழப்பீடும் பெற்றுக் கொடுத்தோம். 27 ஊராட்சியை சேர்ந்த 37 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதி விவசாய நிலங்கள் நல்ல விவசாய நிலங்கள். தலைமுறை தலைமுறையாக அந்த பகுதி மக்கள் நிலங்களில் சாகுபடி செய்து நல்ல முறையில் வாழ்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட விளை நிலங்களை விவசாயிகள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அதை திமுக அனுமதிக்காது. ஜெயங்கொண்டம் பகுதி மக்கள் ஒற்றுமையாக இருந்து போராடியதால் ஜெயங்கொண்டம் மின் திட்டத்தை கைவிட்டு விட்டார்கள். அதேபோல இந்த பகுதி மக்களும் ஒற்றுமையாக போராடி நிலங்களை காப்பாற்றுவார்கள். என்எல்சி மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக மணிமுக்தாற்றை போக்கை மாற்ற என்எல்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நான் அப்படி ஆற்றின் போக்கை மாற்றினால் பல விளைவுகள் ஏற்படும். ஆளும் அதிமுக அரசு நினைத்தால் இதை தடுக்க முடியும். ஆனால் செய்ய மாட்டார்கள். என்எல்சியில் உற்பத்தியாகும் மின்சாரம் கர்நாடகாவுக்கு செல்கிறது, கேரளாவுக்கு செல்கிறது. நம் பகுதி மக்களுக்கு வேலை கொடுப்பதில்லை. அப்படிப்பட்ட நிறுவனம் தேவையா..? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர் வேலை கூட வட மாநிலத்தவர்களுக்கு தான் கொடுக்கிறார்கள். நம்முடைய மக்களுக்கு, மாநிலத்திற்கு செய்யாத அந்த நிறுவனத்திற்கு நம்முடைய நிலங்களை ஏன் கொடுக்க வேண்டும்? நிலங்களை கையகப்படுத்துவதை நிறுத்தவில்லையென்றால் அனைத்து கட்சிகளையும், அமைப்புகளையும் ஒருங்கிணைத்து மாவட்டம் தழுவிய அளவில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.