சேலம் - சென்னை இடையேயான எட்டுவழி பசுமைச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்தலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூவுலகின் நண்பர்கள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
2013, ஆண்டு கொண்டு வரப்பட்ட நில கையக சட்டத்தின் 105 வது பிரிவு செல்லும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவசர தேவைக்காக சமூகம் மற்றும் சுற்றுசூழல் பாதிப்பு தொடர்பாக ஆய்வு நடத்த தேவையில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக 270 கி.மீ தொலைவில் அமைக்கப்பட இருக்கும் எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையப்படுத்தும் பணி அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும், சேலம்-சென்னை பசுமைவழிச் சாலைத் திட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இவ்வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம்21ம் தேதி நீதிபதிகள் சிவஞானம் தலைமையிலான அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சேலம்-சென்னை பசுமைவழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மனுதாரர்கள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதால் தடை விதிக்கப்படுவதாகவும் மறு உத்தரவு வரும் வரை நிலம் கையப்படுத்தக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் இன்றைய விசாரணையில் நிலத்தை கையகப்படுத்தலாம் என்று உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.