நாகை அருகே அரசுப் பள்ளியை குடிகாரர்களின் பாராக மாற்றி முக்கிய கோப்புகளை கிழித்து பள்ளியை அடித்து உடைத்து அட்டூழியம் செய்யும் மர்மகும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த வடக்குவெளி கிராமத்தில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. அங்கு மது அருந்துவது, அநாகரிக செயல்களில் ஈடுபடுவது, உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் மர்ம கும்பல் சிலர் ஈடுபட்டுவருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்துள்ளது.
தினசரி நள்ளிரவில் பள்ளியில் மது அருந்திய சமூக விரோதிகள் வகுப்பறைகளின் பூட்டுகளை உடைத்தும், அலமாரியில் உள்ள மாற்றுசான்றிதல்கள் உள்ளிட்ட முக்கிய கோப்புகளை அழித்தும், வகுப்பறைகளில் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் பாயைப்பயன்படுத்தி மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை உட்கொண்டும், பள்ளியில் உள்ள அனைத்து பொருட்களையும் உடைத்து சேதபடுத்தியும் சென்றுள்ளனர்.
இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில்," அரசு டாஸ்மாக்கடை பள்ளியின் அருகில் இருப்பதாலேயே இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருகிறது. இது தொடர்பாக கீழ்வேளூர் காவல்நிலையத்தில் பலமுறை புகார்கள் கொடுத்தும் எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக பள்ளியை சீரமைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுவரும் மர்ம கும்பல்களை காவல்துறை உடனடியாக கைது செய்யவேண்டும்". என்கின்றனர்.